மாதச் செலவுகள் மற்றும் எதிர்பாராத செலவுகளுக்காக, வங்கி சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருப்பது வழக்கமானது தான்.தேவைப்படும் போது எடுத்துக் கொள்ள, இது வசதியாக இருக்கும். எனினும், சேமிப்பு கணக்கில் அதிகளவில் பணம் வைத்திருப்பது ஏற்றதல்ல என்று கருதப்படுகிறது. தேவை என, கருதும் தொகையை மட்டும், சேமிப்பு கணக்கில் வைத்துக் கொண்டு, எஞ்சிய தொகையை, பொருத்தமான வழிகளில் முதலீடு செய்ய வேண்டும்.
சேமிப்பு கணக்கில் உள்ளது போலவே, உடனடியாக பணம் எடுத்துக் கொள்ளும் வசதி, குறைந்த ரிஸ்க் போன்ற அம்சங்கள் கொண்ட முதலீட்டு சாதனங்களும் பல இருக்கின்றன. இவற்றில், லிக்விட் பண்டும் ஒன்றாக அமைகின்றன. லிக்விட் பண்ட் என்பவை, மியூச்சுவல் பண்ட்களில் ஒரு வகை. குறுகிய கால நோக்கிலான முதலீடாக இவை அமைகின்றன. அதற்கேற்ப இவை, குறுகிய கால முதலீட்டு சாதனங்களில் முதலீடு செய்கின்றன.
ஒரு ஒப்பீடு!வங்கி சேமிப்பு கணக்கில், 4 சதவீத வட்டி கிடைக்கிறது. சில தனியார் வங்கிகள் கூடுதல் வட்டி அளித்தாலும், அதிக பேலன்ஸ் இருக்க வேண்டும் எனும் நிபந்தனைகள் உண்டு. ஆனால், சந்தையுடன் இணைக்கப்பட்ட மியூச்சுவல் பண்ட் திட்டங்களான, லிக்விட் பண்ட்களில், ஆண்டுக்கு, 7.5 முதல், 8.5 சதவீத பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.ரிஸ்க் அம்சத்தை பொறுத்தவரை, சேமிப்பு கணக்கு அதிக ரிஸ்க் இல்லாதது; பணம் பாதுகாப்பாக இருக்கும். லிக்விட் பண்ட்கள் சந்தையுடன் தொடர்பு கொண்டவை என்பதால், சந்தை நிகழ்வுகள் தாக்கம் செலுத்தும்; ஏற்ற இறக்கம் இருக்கலாம். சேமிப்பு கணக்கு போல, இவை பலன்களுக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை.சேமிப்பு கணக்கு டிபாசிட்டை எந்த நேரத்திலும் எளிதாக அணுகலாம்; பல விஷயங்களுக்காக பயன்படுத்தலாம். உங்கள் வங்கியிலேயே இயக்கி கொள்ளலாம். லிக்விட் பண்ட் என்பது, புதிய முதலீடாகும்.
பணம் எடுக்கும் வசதி!சேமிப்பு கணக்கில் இருந்து, தேவைக்கேற்ப, உடனடியாக காசோலை அல்லது பணம் எடுக்கும் படிவம் மூலம், பெரிய தொகை எடுத்துக் கொள்ளலாம். டெபிட் கார்டு மூலம், குறிப்பிட்ட அளவு பணம் எடுத்துக் கொள்ளலாம்; ஆன்லைன் மூலமும், பணப் பரிவர்த்தனை செய்யலாம். லிக்விட் பண்ட்களிலும், தேவைக்கேற்ப எளிதாக பணமாக்கி கொள்ளலாம் என்றாலும், யூனிட்களை விற்பதற்கான கோரிக்கையை சமர்ப்பித்து, ஒரு வேலை நாள் காத்திருக்க வேண்டும். அதன்பின், பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். சேமிப்பு கணக்கு டிபாசிட் மற்றும் லிக்விட் பண்ட்கள் இரண்டுக்குமே, சாதகமான அம்சங்கள் உண்டு என்பதால், முதலீட்டாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப பலன்கள், ரிஸ்க், அணுகும் வசதி உள்ளிட்ட அம்சங்களை பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும்.

.gif)